ஒன்றிய அரசின் ரயில்வே துறையின் மோசமான செயல்பாட்டால், ஒரே விபத்தில் இருமுறை செத்துப் பிழைத்திருக்கிறார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பாலிக் என்ற 24 வயது இளைஞர். கடந்த ஜூன் 2 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், ஒடிஷா மாநிலத் தின் பாலசோர் மாவட்டத்தில், மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்ட கோர விபத்தில், 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1000 பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த விபத்தில் தான் பிஸ்வஜித்தும் சிக்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/odisa-train.jpg)
ஹெலராம் மாலிக், மேற்கு வங்கம் ஹவுராவில் கடை நடத்திவருகிறார். அவரது 24 வயது மகன் பிஸ்வஜித்தை, வெள்ளிக்கிழமை, ஷாலிமர் ஸ்டேஷனிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழியனுப்பி வைத்துவிட்டு திரும்புகிறார். இரவு ஏழு மணியளவில் மகன் பயணித்த எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான செய்தி தொலைக்காட்சிகளில் வரவும் அதிர்ச்சி யாகிறார். உடனே மகன் பிஸ்வஜித் பாலிக்கை செல்பேசியில் தொடர்புகொள்கிறார். எப்போதும் உற்சாகமாகப் பேசும் மகனின் குரலைக் கேட்க பதட்டத்தோடு காத்திருக்க... மறுமுனையிலிருந்து மிகவும் மெல்லிய, வலிமிகுந்த குரலில் மகன் பேசுவதைக் கேட்டதும், ஒருபுறம் மகன் உயிருடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி என்றாலும், இன்னொருபுறம் மகன் வலியோடு பேசுவது தந்தையின் மனதை உலுக்குகிறது.
விபத்தில் தனக்கு பலத்த அடிபட்டுள்ளதாக மகன் சொல்லச் சொல்ல அப்பாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. "கவலைப்படாதே... உன்னைக் காப் பாற்றி அழைத்துச்செல்ல அப்பா உடனே வருகிறேன்" என்று செல்பேசியில் ஆறுதலாகப் பேசியவர், உடனடியாக செயலில் இறங்குகிறார். நிலைமையின் அவசரத்தை உணர்ந்த அவர், உள்ளூர் ஆம்புலன்ஸ் டிரைவரான பலாஷ் பண்டிட்டைத் தொடர்பு கொண்டு, ஒடிஷாவின் பாலசோரில் விபத்து நடந்த இடத்திற்கு 230 கிமீ பயணத்தைத் தொடங்க முடிவுசெய்தார். தனக்கு துணைக்கு அவரது மைத்துனர் தீபக் தாஸை உடன் அழைத்துக்கொண்டார்.
ஆம்புலன்ஸ் விரைந்து பயணித்ததில், விபத்து நடந்த அன்றைய நள்ளிரவிலேயே அந்த ஸ்பாட்டுக்கு வந்தார். அப்படி வரும் வழியிலேயே தனது மகனைத் தொடர்புகொண்டு பேச முயற்சிக்க, மகனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. மனதுக்குள் ஒருவித பயம் அப்பிக்கொள்ள, தன் மகனுக்கு எதுவும் அசம்பாவிதம் நேர்ந்துவிடாது என்ற நம்பிக்கையோடு பயணித்தார். விபத்து நடந்த இடத்துக்கு ஹெலராம் மாலிக் வந்து சேர்ந்தபோது, எங்கெங்கும் மரண ஓலங்கள். ரயில்வே பாதுகாப்புப்படையும், மீட்புப்படையினரும் வேகவேகமாக பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அங்குள்ள அதிகாரிகளிடம் சென்று தனது மகன் குறித்த விவரவங்களைக் கேட்கிறார். சரியான விவரம் கிடைக்கவில்லை.
மகனின் செல்பேசி எண்ணுக்கு திரும்பத் திரும்ப முயற்சி செய்து பார்க்கிறார். எதுவும் பதிலில்லை. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு சென்று, தனது மகன் எங்காவது சிகிச்சையில் இருக்கிறானா என்று தேடித் தேடிப் பார்க்கிறார். கிடைக்கவேயில்லை. இருந்தாலும் தன் மகன் உயிரோடு தான் இருப்பான் என்ற நம்பிக்கையைத் தளரவிடவில்லை. மருத்துவமனைகளெங்கும் தேடிப் பார்த்தும் மகனைக் காணாததால் அதிகாரிகளிடம் விசாரிக்காமல், அங்கே மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் மக்களிடம் இருவரும் விசாரிக்கிறார்கள். அவர்களோ, மருத்துவமனையில் உங்கள் மகன் இல்லையென்றால், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை தற்காலிகமாக வைத்திருக்கும் பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் சென்று பாருங்கள். ஒருவேளை அங்கே கிடைக்கலாமென்று ஆலோசனை கூறுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/odisa-train1.jpg)
மகனை உயிரோடு மீட்பதற்காக இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கும் நம்மிடம் இப்படி சொல்கிறார்களே, என மனது ஏற்றுக்கொள்ளாவிடினும், அங்கும் சென்று பார்த்துவிடலாமென்று குழப்பமான சூழலில், தற்காலிக மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த உடல்களைப் பார்க்கிறார்கள். அப்போது ஒரு உடலிலிருந்து வலது கையில் சின்னதாய் நடுக்கம் போல் அசைவு தென்பட்டது. அதிர்ச்சியுடன் அந்த உடலை மூடியிருந்த துணியை விலக்கிப் பார்த்தால், அது தனது மகன் பிஸ்வஜித் தான் என்பதை அறிந்ததும் இன்ப அதிர்ச்சி. மகன் பிஸ்வஜித் பலத்த காயங்களால் மயக்கமடைந்து கிடக்க, அவன் மயக்கத்தில் இருக்கிறானா, இறந்துவிட்டானா என்பதைக்கூட பொறுப்பாக சோதித்துப் பார்க்காமல், இறந்தவர்களோடு சேர்த்து பிஸ்வஜித்தையும் அள்ளிப்போட்டு தற்காலிக மார்ச்சுவரியில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
மகனுக்கு உயிர் இருப்பதை உணர்ந்ததும் உடனடியாகத் தனது ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு பாலசோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தீவிர சிகிச்சைப்பிரிவில் மகனை சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக் காக கொல்கத்தாவுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்து உடனடியாக ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போதுவரை பிஸ்வஜித் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தனர். அப்பாவின் பேரன்புப் போராட்டத்தால் விபத்திலிருந்தும், மார்ச்சுவரியிலிருந்தும் மீண்டுள்ள மகன், முழுமையாக குணமடைய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/odisa-train-t.jpg)